ஈரோடு மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சம்பத் நகரில் உள்ள இந்திய மருத்துவ சங்க அரங்கில் நடைபெற்றது. அப்போது, மகப்பேறு காலத்தில் மருத்துவர்கள் மேற்கொள்ளும் சவால்கள், மகப்பேறு சிகிச்சை நேரத்தில் மரணங்கள் நிகழ்வதால் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர் களை சந்தித்த அச்சங்கத்தின் தலைவர் ரேவதி சதாசிவம், மகப்பேறு சிகிச்சையின் போது ஏற்படும் மரணங்கள் குறித்து மாதந்தோறும் நடைபெறும் தணிக்கை குழு கூட்டத்திற்கு, குறிப்பிட்ட நேரம் மற்றும் தினத்தை(தேதியை) நிர்ணயிக்க வேண்டும் என்றும் இதன்மூலம் ஒரே ஒரு மகப்பேறு மருத்துவர் பணியாற்றும் மருத்துவமனையில் மாற்று மருத்துவரை பணியமர்த்த உதவியாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் மகப்பேறு மரணம் குறித்த தணிக்கை கூட்டத்தில் மகப்பேறு அல்லாத மருத்துவர்கள், வருவாய்த்துறையினர் இருப்பதால் தங்களின் நியாயமான விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்றும் இதற்கு பதிலாக மாவட்ட இந்திய மருத்துவ சங்கத்தின் மூத்த மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவர்கள் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்து, குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அவற்றை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறினார்