ஈரோடு மாநகராட்சியில் மொபைல் வாகனம் மூலம், வரி வசூல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாநகராட்சியில் 2024 2025 நிதியாண்டுக்கான சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி, குப்பை வரி உள்ளிட்ட வரிகளோடு, கடந்த ஆண்டு வரை நிலுவையிலுள்ள வரியையும் வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் மார்ச் 31க்குள் 100 சதவீத வரியை வசூலிக்க அதிகாரிகள் திட்டமிட்டிருக்கின்றனர். இதற்காக, மாநகராட்சியில் உள்ள வரி வசூலிப்பு மையங்கள் விடுமுறை நாட்களிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜி பே, போன் பே ஆகிய செயலிகளின் மூலமாகவும் வரிவிதங்களை செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் 400 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உதவி வருவாய் அலுவலர்கள், வரி வசூலிப்பவர்கள் மூலம் வீடுகளில் ஆய்வு மேற்கொண்டு, ஜப்தி அறிவிப்புகள் வழங்கியும், அதன் தொடர்ச்சியாக வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு துண்டிப்பு, கடைகளுக்கு 'சீல்' வைப்பு போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாநகராட்சியில் மொபைல் வாகனம் மூலம், இன்று முதல் வரி வசூல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.