ஈரோடு: வாலிபர் மயங்கி விழுந்து சாவு
ஈரோடு, மோளக்கவுண்டன் பாளையம், பாலதண்டாயுதம் வீதியை சேர்ந்தவர் ராஜா (44). இவரது 2-வது மகன் சாம் சுந்தர் (22). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவர், ஈரோடு பெரியார் நகரில், ராஜாவின் தாய் பரிமளாவின் வீட்டில் வசித்து வந்தார். 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த சாம்சுந்தர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, அவர் தங்கியிருக்கும் பாட்டியின் வீட்டிற்கும் கூட வராமல் சுற்றித்திரிந்துள்ளார். அவரது நடவடிக்கை பிடிக்காததால், பாட்டி பரிமளாவும், சாம் சுந்தரின் தந்தையுமாகிய ராஜா வசித்து வரும் மோளகவுண்டம்பாளையம் பகுதிக்கே வீட்டை மாற்றிக் கொண்டு சென்று விட்டார். இந்த நிலையில், சாம் சுந்தர் எப்போதும் மது குடித்து விட்டு பெரியார் நகர் பகுதியிலேயே சுற்றித்திரிந்துள்ளார். மேலும் ஓடைப்பள்ளம் பகுதியில், கிடைக்கும் இடங்களில் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், அசோகபுரி ஓடைபள்ளம் அருகில் நேற்று சாம்சுந்தர் மது போதையில் மயங்கி கிடந்துள்ளார். அதனைப் பார்த்த அப்பகுதியினர் ஆம்புலன்ஸ் மூலமாக அவரை, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சாம் சுந்தர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.