வால்பாறை: ஏடிஎம் அட்டையை மாற்றி கொடுத்து நூதன திருட்டு
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 07.11.2024 தேதி முருகம்மாள் (45) என்பவர் அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை ATM-இல் எடுக்க சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு ATM-இல் பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த அடையாளம் தெரியாத ஒரு நபரிடம் அவரது ATM கார்டு மற்றும் பின் எண்ணை கொடுத்து பணம் எடுத்து தர சொல்லியதாகவும், அப்போது அந்த கார்டை பெற்று ATM-இல் போட்டுவிட்டு உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று சொல்லியதாகவும், பின்னர் கார்டை கீழே தவறவிட்டதுபோல் போட்டு வேறு ATM கார்டை கொடுத்து சென்றதாகவும், பின் தனது கார்டை பயன்படுத்தி வேறு வங்கி ATM இயந்திரத்திலிருந்து ரூபாய் 9000/- பணம் எடுத்து மோசடி நடந்திருப்பது தெரிய வந்ததாகவும் முருகம்மாள் (45) வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதன் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்த நிலையில் நேற்று (20.11.2024) கேரள மாநிலத்தைச் சேர்ந்த நஜுப் (36) என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் அவர் மோசடி வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் அவரை கைது செய்து அவரிடமிருந்து 43 போலியான ATM கார்டுகள் மற்றும் சுமார் ரூபாய் 5290 பறிமுதல் செய்யப்பட்டது.