வால்பாறை - Valparai

கோவை: காட்டு மாடு தாக்கி வடமாநில தொழிலாளர்கள் இருவர் காயம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள தோணிமுடி எஸ்டேட் மூன்றாவது டிவிசனில் நேற்று எதிர்பாராத விதமாக காட்டு மாடு தாக்கியதில் வடமாநில தொழிலாளர்கள் இருவர் காயமடைந்தனர்.  தோட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல் 25-ம் நம்பர் தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறித்துவிட்டு மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் பணிக்குச் சென்றனர். அப்போது தேயிலை செடிக்குள் படுத்திருந்த காட்டு மாடு திடீரென பாய்ந்து தொழிலாளர்களைத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கனியாலி மற்றும் அஸித்தா கத்தான் (19) ஆகிய இரு தொழிலாளர்களும் காயமடைந்தனர். உடனே பணிபுரிந்த மற்ற தொழிலாளர்கள் உடனடியாக அவர்களை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேலும் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  சம்பவம் குறித்து தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் ஆலோசனையின்படி, வனவர் முத்து மாணிக்கம் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், காட்டு மாடு தாக்கியதில் காயமடைந்த இரு தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் வனத்துறை சார்பில் தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதி தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோஸ்


கோயம்புத்தூர்