கோவை: கல்லூரி நிர்வாகம் அதிக கட்டணம் கேட்பதாக புகார்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பழங்குடி இருளர் சமூக மாணவர் சஞ்சய், அரசு இடஒதுக்கீட்டின் கீழ் கோவை ரத்தினம் கல்லூரியில் பிசியோதெரபி படிக்க தேர்வாகியுள்ளார். ஆனால், கல்லூரி நிர்வாகம் அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக கட்டணம் கேட்பதாக குற்றம்சாட்டியுள்ளார். சஞ்சய் கூறுகையில், கல்லூரிக்குச் சென்றபோது, இரண்டு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் (ரூ.2,10, 000) கட்டணமாக செலுத்தினால் மட்டுமே கல்லூரியில் சேர்க்க முடியும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் கூறியதாகத் தெரிவித்தார். ஆனால், அரசு 30, 000 ரூபாயை மட்டுமே கட்டணமாக நிர்ணயித்துள்ளது. வறுமையில் வாழ்ந்து வரும் தன்னால் அவ்வளவு தொகையை செலுத்த முடியாது என்று கூறும் சஞ்சய், தனது மேற்கல்வியை தொடர உதவுமாறு கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும், தகுதியான மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு தடையின்றி உதவ வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.