கோவை கவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன பொதுக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்ட திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசும்போது, ஒன்றிய அரசு ஓர வஞ்சனையாக, மாற்றான் தாய் பிள்ளையாக தமிழகத்தை வஞ்சிக்கிறது. நாடாளுமன்றத்தில் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான் தடித்த வார்த்தைகளில், uncivilized, undemocratic, என்று தமிழர்களை
அழுத்தச் சொற்களால் அவர் அவமானப்படுத்துகிறார். ஒன்றிய அமைச்சர் ஒருவர், ஒரு தமிழ் தேசிய இனத்தை வரலாற்றில் நாகரீகத்திற்கு பதியப்பட்ட சமூகத்தை, uncivilized என்று கூறுகிறார், சந்தை, சாவடி, மந்தை, என்று இங்கு நின்று பேசினாலும் என் மனம் வருத்தப்படாது. நாடாளுமன்றம் என்பது எங்களுடைய வீடு, அங்கு நின்று கொண்டு ஒரு மத்திய அமைச்சர் தமிழ்நாட்டை பேசினால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். 2252 கோடி அரசு பள்ளியில் பயிலும் 43 லட்சம் மாணவர்களுக்கு பயன்பட வேண்டிய தொகையை, மும்மொழியை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் தர முடியும் என்று ஒரு நிபந்தனையை விதித்து இருக்கிறார்கள். ஒரு நெருக்கடிக்கு நம்மை தள்ளுகிறார்கள். ஸ்டாலின் அவர்களோ 10, 000 கோடி தந்தாலும், மும்மொழியை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த மாட்டேன் என அவர்களை கன்னத்தில் அறைந்ததை போல கூறி இருக்கிறார் என்ற பேசினார்.