சென்னை: தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி விரைவில் சுற்றுப்பயணம்
அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்த தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளுக்கும் விரைவில் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக, மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநில செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நேற்று (நவம்பர் 6) நடைபெற்றது. இதில், மாவட்டம் தோறும் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் அதிக அளவில் இளைஞர்களை கட்சிக்குள் சேர்ப்பது, அவர்களுக்கு பொறுப்புகள் வழங்குவது, தற்போது அதிமுக மீதான மக்களின் மனநிலை உள்ளிட்டவை குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அனைவரும் தயாராக வேண்டும். வாக்குச்சாவடி குழுக்கள் இல்லாத இடங்களில் உடனடியாக அமைக்க வேண்டும். கட்சியை தேர்தலுக்குத் தயார்படுத்த வேண்டும். திமுக ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும், அதிமுக அரசின் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். 2026 தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்க அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். தொண்டர்களையும், நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்த தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக விரைவில் சுற்றுப்பயணம் தொடங்க இருக்கிறேன் என்று தெரிவித்தார்.