அம்பத்தூர் மண்டல அலுவலகம் முற்றுகை
ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில் முனையமாக அம்பத்தூரில் தொழிற்பேட்டை விளங்கி வருகிறது. இங்குள்ள தாஸ் தொழிற்பேட்டையில், மகாத்மா காந்தி சாலை மற்றும் 24 தெருக்கள் உள்ளன. கனரக வாகன உதிரிப் பாகங்கள், மருத்துவ உபகரணங்கள், ரப்பர் பொருட்கள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு 300க்கும் மேற்பட்ட சிறு, குறு நடுத்தர தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, சாலை மற்றும் தெருக்கள் அனைத்தும் சேதமடைந்து போக்குவரத்துக்கு ஏதுவாக இல்லாத நிலையில் இருந்து வருகிறது. மழை காலங்களில், இடுப்பளவு தேங்கி நிற்கும் மழை வெள்ளத்தால், தொழிற்சாலைகள் செயல்பட முடியாத நிலைமை ஏற்படுகிறது. இதனால் பல கோடி வருவாய் தொழிற்சாலைகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. தெருவிளக்குகள் பழுதடைந்துள்ளதால், திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன, போதிய வெளிச்சமின்றி விபத்துகளும் ஏற்படுகின்றன. புதிதாக தார் சாலை, மின் கம்பங்கள் அமைக்க கலெக்டர், தாசில்தார், சென்னை மாநகராட்சி உட்பட பலதுறைக்கு புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டன. இருப்பினும், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால், தாஸ் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் நேற்று அம்பத்தூர் 7 மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.