திண்டிவனம்: ஆற்றுப் பாலத்தில் பேருந்து மோதல்: ஒருவா் பலி; 10 போ் காயம்
திண்டிவனத்தை அடுத்த மேல்பாக்கம் மதுரா, பெருமாள்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் வினோத்குமார் (28). இவர், தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் தனியார் பேருந்தில் திருவண்ணாமலையில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர், அனைவரும் திண்டிவனம் நோக்கி பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தனர். பேருந்தை வடக்கு நெமிலி கிராமத்தைச் சேர்ந்த பூசைபட்டி மகன் அய்யப்பன் (42) ஓட்டினார். இந்தப் பேருந்து வல்லத்தை அடுத்த தொண்டி ஆற்றுப் பாலத்தின் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த ஆற்றுப் பாலத்தின் தடுப்புக் கட்டையில் மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ராமச்சந்திரன் மகன் ஏழுமலை (52) பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணம் செய்த பூபாலன் (46), மலர் (36), ரமேஷ் (47), ஜெயலட்சுமி (47), சுரேஷ் (37), ஜோதி (58), தேவராஜ் (80), ராஜேந்திரன் (47), சுசீலா (55), ஜெகதேவி (37) ஆகிய 10 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.