நடு சாலையில் மின்கம்பம் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி
திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் இடுவாய் ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இடுவாய் ஊராட்சி சார்பில் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எம்ஜிஆர் நகர் வீதிகளில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. மின் கம்பத்தை அகற்றாமலேயே சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் வாழும் குடியிருப்பு வாசிகள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சாலையின் நடுவே மின்கம்பத்தை அகற்றாமல் கான்கிரிட் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் வர முடியாத நிலை உள்ளதாகவும் உடனடியாக மின்கம்பத்தை அகற்றி சாலையின் இருபுறமும் பாதுகாப்பான முறையில் மண் கொட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இது குறித்து ஊராட்சி தலைவரிடம் கேட்டதற்கு பத்து வருடங்களுக்கு முன்பே மின் கம்பம் அமைக்கப்பட்டதாகவும் அந்த கம்பத்தை அகற்றக்கோரி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டதற்கு ஊராட்சி நிர்வாகம் அளித்த பணியை தான் எங்களால் செய்ய முடியும் எனவும் ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்கள் வந்தால் மின்கம்பத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி செல்லட்டும் எனவும் பதில் அளித்துள்ளார்.