பல்லடம் அருகே விற்பனைக்காக போதை மாத்திரை கடத்தி சென்ற கல்லூரி மாணவன் உட்பட இரண்டு இளைஞர்கள் கைது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் பல்லடம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை போலீசார் விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்து உள்ளனர். இதனையடுத்து அவர்கள் வந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்த போது 100 மேற்பட்ட போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்த போது இவர்கள் இருவரும் அவரைப் பாளையம் பகுதியை சேர்ந்த லக்ஷ்மணன் மற்றும் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி என்பது தெரியவந்தது. இதில் லக்ஷ்மணன் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் கார்த்தி இரண்டாம் ஆண்டு கல்லூரி படிப்பு படித்து வருகிறார். மேலும் இருவரும் சட்ட விரோதமாக போதை மாத்திரையை விற்பனைக்காக கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதனையடுத்து பல்லடம் போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் சட்டவிரோதமாக விற்பனைக்காக கடத்தி சென்ற 100 போதை மாத்திரை மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.