அவினாசியை அடுத்த தெக்கலூர் பஸ் நிறுத்தம் பகுதியில் திருப்பூர்-கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறியதாவது: -நடப்பு ஆண்டில் மட்டும் கூட்டமைப்பு மூலமாக 32 முறை மத்திய, மாநில அரசு அதிகாரிகளையும், ஜவுளிதுறை சார்ந்த அதிகாரிகளையும் சந்தித்து விசைத்தறி தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.
ஆனால் இதற்கு இதுவரை எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. ஜவுளிதுறையில் நவீன தொழில்நுட்பத்தில் நாடாவில் இயங்கும் சாதா விசைத்தறிகளுக்கு தனிரகம் ஒதுக்கீடு வழங்க வேண்டும். மின்கட்டண உயர்வில் இருந்து பாதுகாக்க மத்திய மாநில அரசு சோலார் பேனல் திட்டத்தை அமல்படுத்தி விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும். தொழில் செய்வோரை அரசுகள் கண்டுகொள்வதில்லை.
இதை கவனத்தில் கொண்டு அரசுகளை கண்டித்து கோரிக்கை நிறைவேறும் வரை மத்திய, மாநில அரசையும் கூலி உயர்வு கொடுக்க மறுக்கும் டெக்ஸ்டைல்ஸ் அதிபர்களை கண்டித்து கவனஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வாறு அவர்கள் கூறினர். ஆர்ப்பாட்டத்தில் சோமனூர், தெக்கலூர், புதுப்பாளையம், அவினாசி மற்றும் பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விசைத்தறியாளர்கள் கலந்துகொண்டனர்.