தஞ்சை: ஆக்கிரமிப்பு மனைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தஞ்சை மேலவஸ்தா சாவடி நடுத்தெரு பகுதியில் பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து மனைப்பிரிவு அமைக்க முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலவஸ்தா சாவடி நடுத்தெருவில் சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றோம். எங்கள் கிராம மக்கள் பயன்பாட்டிற்கு பொது குளம், முத்துமாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குரிய இடத்தில் பொது சத்திரமும், பொது தண்ணீர் பந்தலும் ஆதிகாலம் முதல் இருந்து வருகிறது. இதனை இதுவரை நாங்கள் பராமரித்து அனுபவித்து வருகிறோம். இந்நிலையில் ஒரு சிலர் சட்டத்துக்கு முரணாக ஆவணங்களைத் தயார் செய்து அந்த இடத்தில் அத்துமீறி நுழைந்து மனை பிரிவு அமைக்க முயற்சிக்கின்றனர். நாங்கள் அதை தடுத்து நிறுத்தினாலும், அங்கிருந்த ஆங்கிலேயர் கால பழைய கட்டிடங்களை இடித்து தரைமட்டம் ஆக்கி, கோயில் குளம், பொது தண்ணீர் பந்தல், பொது சத்திரம் ஆகியவற்றை சேதப்படுத்தி விட்டனர். எனவே இந்த நபர்கள் மீது விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.