பட்டாசு கடையை அகற்ற கோரி அமமுகவினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் திலகர் திடலில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட பட்டாசு கடையை அகற்ற கோரி அக்கடைமுன் அமமுகவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தஞ்சாவூர் திலகர் திடலில் விதிமுறைகளை மீறி பட்டாசு கடை அமைக்க அனுமதி கொடுத்த மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், உடனடியாக அக்கடையை அகற்ற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த அமமுக துணைப் பொதுச் செயலர் எம். ரெங்கசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தீபாவளியையொட்டி, தஞ்சாவூரில் நடைபாதைகளில் வியாபாரிகள் கடை அமைப்பதற்கு வசூல் செய்யப்பட்டது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டு, கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. கடைகளுக்கு பணம் வாங்கியவர்கள் உடனடியாக வியாபாரிகளிடம் அத்தொகையைத் திருப்பித் தர வேண்டும். திலகர் திடலில் பொதுமக்களுக்கு பொழுதுபோக்குக்காகவும், பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்காகவும் மட்டுமே அனுமதிக்க வேண்டும். இதில், வர்த்தக ரீதியாக கடைகள் அமைப்பதற்கு எந்தவித அனுமதியும் கிடையாது. சுற்றிலும் மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், பெரியகோயில் உள்ள நிலையில் எந்தவித சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை மாநகராட்சி உடனடியாக ரத்து செய்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வழக்கு தொடுக்கப்படும் என்றார் ரங்கசாமி.