தஞ்சாவூர் கோடியம்மன் கோயிலில் 16 இணைகளுக்கு திருமணம்
தஞ்சாவூர் கோடியம்மன் கோயிலில் 16 இணைகளுக்கு திங்கள்கிழமை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய 31 இணைகளுக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திங்கள்கிழமை திருமணம் நடத்தி வைத்து, சீர்வரிசைகளை வழங்கி வாழ்த்தினார். இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை சார்ந்த கோயில்களில் பொருளாதாரத்தில் பின் தங்கிய இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதேபோல, தஞ்சாவூர் கரந்தை அருகேயுள்ள தஞ்சாவூர் கோடியம்மன் கோயிலில் திங்கள்கிழமை திருமணம் முடித்த மணமக்கள் கோடியம்மன் கோயிலில் 16 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, தலா 4 கிராம் மாங்கல்யத்துடன் கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்ஸி, குக்கர், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவை சீர்வரிசை பொருள்களாக வழங்கப்பட்ட விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி. கே. ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), மேயர் சண். இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.