த. வடகாடு பகுதியில் சிலிக்கான் தாது மணல் எடுக்க எதிர்ப்பு
பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் காவல்துறை அனுமதியுடன் சிலிகான் தாது மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை வடகாடு கிராம மக்கள் மணல் திட்டுகளில் கிடைக்கும் ஊற்று நீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் சிலிகான் தாது மணல் இருப்பதாக கூறி 11 ஏக்கர் நிலப்பரப்பில் 26 அடி ஆழத்துக்கு தாது மணல் எடுத்து விற்பனை செய்ய தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறை பாதுகாப்புடன் சிலிக்கான் தாது மணல் எடுப்பதாக அப்பகுதி மக்களுக்கு வந்த தகவலின் பெயரில் 500க்கும் மேற்பட்டோர் வடகாடு தோப்பு முத்துமாரியம்மன் கோவில் அருகே திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சுகுமார் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பேரில் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டதாக கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் மணல் எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.