திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜாமடம் பகுதியில், நேற்று மாலை, சாலையோரத்தில் நின்று அழுது கொண்டிருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிராம்பட்டினம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிராம்பட்டினம் காவல்துறையினர், சிறுமியை மீட்டு, பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மகளிர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமியை, மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் முத்துப்பாண்டியன் ( 28), மற்றும் அவரது நண்பர் தவசீலன் ( 27) ஆகிய இருவரும் அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த இரு இளைஞர்களையும் கைது செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமியின் தந்தை தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்ததாகவும், கடன் தொடர்பாக நிறுவனத்திற்கு வந்து தகவல் தெரிவிக்குமாறு சிறுமியின் தந்தையை இவர்கள் அழைத்ததாகவும், தனக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி தனது மகளை நிதி நிறுவன அலுவலகத்திற்கு அனுப்பி வைத்ததாகவும், அதன் பின்பு அந்த இரு இளைஞர்களும் இந்தச் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. மேலும் தொடர்ந்து அந்த இரண்டு இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.