தஞ்சாவூர் கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்
மகாத்மா காந்தி ஜெயந்தியையொட்டி, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் எதிரே ராணுவத்தினர் மாளிகை வளாகத்திலுள்ள கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. மகாத்மா காந்தியின் படத்துக்கு மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்த அவர் தெரிவித்தது: தஞ்சாவூர் மாவட்டத்தில் கதர் விற்பனை நிகழாண்டு ரூ. 1. 20 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை அடைவதற்கு கதர் துறையால் தயார் செய்யப்படும் அசல் வெள்ளி ஜரிகை பட்டு ரகங்கள், கதர் ரகங்கள், பாலியஸ்டர் ரகங்கள், உல்லன் ரகங்கள் ஆகியவை வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புத்தம் புதிய வடிவமைப்பில் உள்ளன. மேலும் முழுவதும் சுத்தமான இலவம் பஞ்சினால் மிக நேர்த்தியாக தயார் செய்யப்பட்ட மெத்தைகள், தலையணைகள், மெத்தை விரிப்புகள் போன்றவை இருப்பில் உள்ளன. கதர் பருத்தி, பட்டு, பாலியெஸ்டருக்கு தலா 30 சதவீதமும், உல்லனுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றார் ஆட்சியர். இந்நிகழ்ச்சியில் கதர் கிராமத் தொழில்கள் தஞ்சாவூர் உதவி இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) டி. கோபாலகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்ரெ. ம தியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.