தஞ்சை: தேவையான உரங்களை கையிருப்பில் வைக்க வேண்டுகோள்
சம்பா சாகுபடி பணிகள் மும்முரம் அடைந்துள்ள நிலையில் உரத்தட்டுப்பாடு ஏற்படாத வகையில் வேளாண் துறையினர் உரங்களை கையிருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி, வல்லம் உட்பட பல பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகள் வெகு மும்முரமாக நடந்து வருகிறது. மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டதால் தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி, வண்ணாரப்பேட்டை, 8. கரம்பை, கல்விராயன் பேட்டை, சித்திரக்குடி, தென்பெரம்பூர், கள்ளப்பெரம்பூர், ராயந்தூர் உட்பட பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொள்ளவில்லை. இதற்கிடையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. தஞ்சாவூர் மாவட்டத்திலும் கனமழை பெய்தது. இதை பயன்படுத்தி விவசாயிகள் நிலத்தை உழுது நாற்று விட்டனர். தற்போது நாற்று பறித்து நட்டு 4 வாரங்களுக்கு மேல் ஆவதால் பலபகுதிகளிலும் சம்பா பயிர்கள் நன்கு வளர்ந்து வருகின்றன. விவசாயிகள் களைகளை பறித்து பூச்சி மருந்து மற்றும் உரம் தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பா சாகுபடியை ஒரே நேரத்தில் ஏராளமான விவசாயிகள் மேற்கொண்டுள்ளதால் உரத்தட்டுப்பாடு ஏற்படாத வகையில் வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.