சிவகங்கை: பச்சிளம் குழந்தை கடத்த முயற்சி என ஆட்சியரிடம் புகார்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலிகிராமத்தை சேர்ந்தவர் தனபாலன். இவரது மனைவி செல்விக்கு பிரசவ வழி ஏற்பட்டதை தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரண்டாம் தேதி அனுமதிக்கப்பட்டு நள்ளிரவு 2 மணி அளவில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் குழந்தை வாந்தி எடுத்ததை தொடர்ந்து மருத்துவர்கள் இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் தாய் செல்வி குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட சென்றபோது குழந்தை காணவில்லை என கூறப்படுகிறது. தகவலை அறிந்த உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் ஒரு மணி நேரத்தில் குழந்தையை தாயிடம் செவிலியர்கள் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட முயற்சித்ததாக குழந்தையின் உறவினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியில் ஆஷா அஜித்தை நேரில் சந்தித்து முறையிட்டார். மனுவைபெற்றுக் கொண்ட ஆட்சியர் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர்கள் பணி நேரத்தில் வெளியில்செல்வதாகவும், போதிய சிறப்பு மருத்துவர்களும் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், பச்சிளம் குழந்தையை கடத்தமுயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.