மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள வடக்கு சாலை கிராமத்தை சேர்ந்த சிந்துஜா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் கனவன் ஊரான திருமங்கலத்திலேயே வாழ்ந்துவந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு வயதில் தர்ஷிகா என்கிற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக மனைவி சிந்துஜா தனது தந்தை வீட்டில் வந்து தங்கியுள்ளார். நேற்று தீபாவளி திருநாள் என்பதால் தனது குழந்தையை காண சரவணக்குமார் மனைவியின் ஊரான வடக்கு சாலை கிராமத்திற்கு வந்த நிலையில் கனவன் மனைவியிடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணகுமார் கத்தியால் மனைவியான சிந்துஜாவின் கைகளை கீறியதுடன் மனைவி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சரவணக்குமார் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் அவரது இறப்பிற்கு காரணமான பெண் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சரவணக்குமாரின் உறவினர்கள் சிவகங்கை அம்பெத்கார் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.