சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள மருது பாண்டியர்களின் நினைவு மண்டபத்தில், மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 223 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது வாரிசுதாரர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
ஆங்கிலேயரை எதிர்த்து இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை தொடங்கியவர்கள் மாமன்னர்கள் மருது சகோதரர்கள். ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய இவ்விருவரும் ஆங்கிலேயரால் 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். இவர்களின் 223-வது நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படடுகிறது. நினைவு தினத்தை முன்னிட்டு மருது பாண்டியர்களின் வாரிசுதாரர்கள் நினைவு மண்டபத்தின் முன்புறத்தில் சர்க்கரை பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து சர்க்கரை பொங்கலை அவர்களது திருவுருவ சிலையின் அருகே படையல் இட்டு, வழிபாடு செய்தனர்.