சேலம்: பழங்குடியின மக்கள் உள்ள 22 ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம்
பழங்குடியினருக்கான தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் 2025-ஆம் ஆண்டை ஜன்ஜாதிய கௌரவ் ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வன உரிமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்த ஏதுவாக நேற்று மலைக்கிராமங்களில் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர், பனமரத்துப்பட்டி, ஏற்காடு, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் கெங்கவல்லி ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசிக்கும் 22 கிராம ஊராட்சிகளைச் சார்ந்த 56 குக்கிராமங்களில் நேற்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பழங்குடியின மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பல்வேறு திட்டங்கள், சலுகைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், ஊராட்சிகளில் மரக்கன்றுகளை நடுதல், பஞ்சாயத்து வளர்ச்சிக் குறியீடு மதிப்பெண் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் ஆச்சாங்குட்டப்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பிருந்தாதேவி சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார். அப்போது அவரது தலைமையில் போதைப்பொருள் செயலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.