சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்றது சுகவனேஸ்வரர் திருக்கோவில். இந்த திருக்கோவில் பொதுவாக பௌர்ணமி தினத்தில் தான் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம் ஆனால்
சுயமாக உருவான சிவன் என்பதால் நட்சத்திரத்தின் அடிப்படையில் நேற்று மாலை அன்னாபிஷேக வைபவம் நடைபெற்றது.
அதிகாலை முதல் பால் இளநீர் பஞ்சாமிர்தம் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மற்றும் 16 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பட்டாடை உடுத்தி வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிவாச்சாரியார் வேதங்கள் முழங்க அர்ச்சனைகள் நடைபெற்றன பின்னர் மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
மாலை 5. 30 மணிக்கு மூலவர் சுகவனேஸ்வரருக்கு சுமார் 500 கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வேதங்கள் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இரவு 9 மணி அளவில் மூலவர் சன்னதியில் அன்னத்தால் செய்யப்பட்ட லிங்கத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அன்னலிங்கத்தை சிவாச்சாரியார் தலையில் சுமந்தபடி வந்து கோவிலின் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் அன்னலிங்கம் கரைக்கப்பட்டது பின்னர் சிவனுக்கு அபிஷேகம் செய்த அன்னத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.