சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடும் பனிமூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலை தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்புவிளக்கை ஏற்றிவிட்டு வண்ணம் செல்கின்றனர். அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையால் குளிர் அதிகமாக்குகிறது. ஏற்காட்டின் சீதோஷ்ண நிலை மிகவும் குளுமையாக மாறியுள்ளது. குளிரும் அதிகமாக உணரமுடிகிறது. இன்று காலை முதலே மேகக்கூட்டம் வந்து தரையை போர்த்தியது போல் பனிமூட்டம் இருந்தது. ஏரிப்பகுதியில் உள்ள ஒண்டிக்கடை, ரவுண்டானாவில் சாலையே தெரியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. இதனால், அவ்வழியே வந்த வாகனங்கள் அனைத்தும் முகப்புவிளக்கை எரிய விட்டபடி செல்கின்றனர். ஏற்காடு மலைப்பகுதியில் ஆங்காங்கே மேகக்கூட்டங்கள் தரையிறங்கியது போல் உள்ளது. இப்பனிமூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குளிர் தாங்கும் உடைகளான ஸ்வெட்டர், குள்ளா ஜர்கின் போன்ற உடைகளை அணிந்து தான் வெளியே வர முடிகிறது.