சங்ககிரி தாய் இறந்த துக்கத்தில் மகன் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் வெள்ளையபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ரீனா (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் காதல் மனைவி மற்றும் தாயாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கார்த்திக்கின் தாயார் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். கார்த்திக் தனது தாயார் இறப்பு குறித்து மன வருத்தத்தில் இருந்து வந்தார். கடந்த 18-ந் தேதி மாலை 6 மணியளவில் மனைவி ரீனா வீட்டுக்கு வெளியே வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது குடிபோதையில் இருந்த கார்த்திக் தனது தாயார் இறப்பு குறித்து நினைத்து வருத்தப்பட்டு வீட்டின் மேற்கூரை விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனிடையே வீட்டுக்குள் வந்த மனைவி ரீனா உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸில் கொங்கணாபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கார்த்திக் இறந்தார். இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.