
சங்ககிரி சாலையில் திரியும் தெருநாய்கள்.. கட்டுபடுத்த கோரிக்கை
சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. சங்ககிரி பழைய பஸ்நிலையம், புதிய எடப்பாடி ரோடு, பழைய எடப்பாடி ரோடு, சந்தை பேட்டை, தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு, டி. பி. ரோடு, மலையடிவாரம், முஸ்லிம் தெரு, தேர்வீதி உள்பட இப்பகுதியில் உள்ள வீதி தோறும் சாலைகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவ்வாறு சுற்றும் தெருநாய்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை விரட்டி சென்று கடித்து வருகின்றன. குறிப்பாக இருசக்கரவாகனங்களில் செல்வோரையும் விடாமல் துரத்தி தெருநாய்கள் பீதிக்குள்ளாக்கி வருகின்றன. சாலைகளில் தெருநாய்கள் குறுக்கே ஓடுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.