சேலம்: இந்திய குடிமைப்பணி போட்டித்தேர்வுக்கான பயிற்சி
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: - மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டு தோறும் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டுதல்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின்www. fisheries. tn. gov. inஎன்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை தர்மபுரி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குகர் மற்றும் மேட்டூர் அணை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குகர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் மேட்டூர் அணை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 5-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.