சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நேற்று(அக்.26) நடந்தது. இதில், பங்கேற்ற சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - சட்டமன்ற தேர்தலின்போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து இதுவரை 90 சதவீத மனுக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் முழுவதும் தற்போது ஊராட்சி ஒன்றியம், நகராட்சிகள் வாரியாக மக்களை சந்தித்து மனுக்களை பெற்று வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்த எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியிலேயே தற்போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன. அவர் தனது தொகுதிக்கு கூட எதுவும் செய்யவில்லை. தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது. இதனால் அவர், இந்த ஆட்சி மீது ஏதாவது குறைகளை கூறி உளறிக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து நாங்கள் மக்கள் பணியில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரன் கூறினார்.