சேலம் பள்ளப்பட்டி சின்னேரி வயக்காடு பகுதியை சேர்ந்தவர் இந்துமதி (வயது 19). இவர் நேற்று காலை தனது தாயார் தேவியுடன் (45) கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர்கள் நுழைவுவாயில் முன்பு திடீரென பாட்டிலில் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக வந்து அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசாரிடம் இந்துமதி கூறியதாவது: -
நான் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறேன். நானும், 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வந்த மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்த கவின் (22) என்பவரும் காதலித்து வந்தோம். பின்னர் இருவரும் கடந்த ஜூன் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். இதனிடையே கவின் வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து கணவரிடம் கேட்ட போது என்னை தகாத வார்த்தையால் பேசி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். எனவே என்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.