சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக வழங்கினர். பின்னர் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜேந்திரன், முதல்வரின் காலை உணவு திட்டத்தில் 20 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருவதாகவும், இத்திட்டத்தை அண்டை மாநிலமான தெலுங்கானா மட்டுமல்லாது கனடா நாட்டிலும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேபோல் பல்வேறு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் சேலத்தில் 10 லட்சத்து 44 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாகவும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் கூட்டுறவு துறை சார்பில் 2 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு ரூ. 2970 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 4000 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.