இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சேலத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வெளியிட்டார்.
இதில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 14, 71, 774 ஆண் வாக்காளர்களும் 14, 89, 420 பெண் வாக்காளர்களும் 319 இதர வாக்காளர்கள் என மொத்தம் 29, 61, 513 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். தொடர்ந்து வரும் ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி 29. 10. 2024 தேதி முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் பொதுமக்கள் அதற்குரிய விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர் மற்றும் 18 வயது நிறைவடைந்தவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக நவம்பர் 16 மற்றும் 17, நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருப்பதாகவும் ஜனவரி 6ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட இருப்பதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.