
ஓமலூர்: ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 பேர் கைது
சேலம் மாவட்டம் ஓமலூர் செல்லப்பிள்ளைகுட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். கட்டிட தொழிலாளி. இவர், தன்னுடைய நிலத்துக்கு பட்டா மாற்றவும், தனக்கு வாரிசு சான்றிதழ் கேட்டும் விண்ணப்பம் செய்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், உதவியாளர் பெருமாள் ஆகிய இருவரும் ராஜேந்திரனிடம் 2 சான்றிதழ்களுக்கும் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேந்திரன், இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனைப்படி ரசாயன பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர், அவருடைய உதவியாளர் ஆகியோரிடம் கொடுத்தார். அப்போது மாறுவேடத்தில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான போலீசார் அவர்களை கையும், களவுமாக மடக்கி பிடித்தனர். இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து அவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி 2 பேரையும் கைது செய்தனர்.