சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அங்கு உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், சத்துணவு கூடங்கள், வேளாண் கிடங்குகள், பள்ளிகளில் ஆய்வு நடத்தினார்.
பின்னர் தாலுகா அலுவலகம், தெரு விளக்குகளின் செயல்பாடுகள், பூங்காக்கள், நூலகங்களை பார்வையிட்டார். பின்னர் செக்காரப்பட்டி ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் தரம் மற்றும் இருப்புகளை ஆய்வு நடத்தினார்.
பின்னர் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து அவர்களிடம் கல்வித்திறன் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து வருகைப்பதிவேடுகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தயார் செய்யப்படுவதை பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது குழந்தைகளை நன்கு பராமரித்து, ஊட்டச்சத்தை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தினார். இதனைத்தொடர்ந்து, குண்டுக்கல் ஊராட்சி நூலகத்தில் வாசகர்களின் வருகை குறித்தும், இருப்பில் உள்ள புத்தகங்கள் குறித்தும். புத்தக வாசிப்பாளர்களுக்கான தேவையான இருக்கைகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.