வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பெருமாள் கோவில் அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் குமாரி (வயது 60). இவருடைய கணவர் இருசா கவுண்டர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய ஒரே மகன் மணிகண்டனும் ஏற்கனவே இறந்து விட்டதால் குமாரி வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. மேலும் வருமானத்திற்காக 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 21-ந் தேதி இரவு நீலாவின் வீட்டில் டி. வி. பார்த்துவிட்டு வீடு திரும்பிய மூதாட்டி குமாரி அதன்பிறகு வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இந்த நிலையில் நேற்று (செப்.23) பக்கத்து வீட்டைச் சேர்ந்த நீலா, மூதாட்டி குமாரியை தோட்ட வேலைக்கு கூட்டிச்செல்ல வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மூதாட்டி கொலை செய்யப்பட்டு அழுகும் நிலையில் அவரது உடல் கிடப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நீலா இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இது பற்றிய தகவல் அறிந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் குமார் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.