தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. வெளியூர்களில் தங்கியிருப்பவர்கள் தங்களது சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக படையெடுத்து வருகின்றனர். இதையொட்டி சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் முன்பதிவு டிக்கெட்டுகள் கிடைக்காதவர்கள் ஆம்னி பஸ்களை நாடினர்.
இதனால் ஆம்னி பஸ்களிலும் கட்டணம் தாறுமாறாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பொங்கல் பண்டிகையையொட்டி விமான கட்டணமும் அதிகளவு உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கும், அங்கிருந்து சேலத்துக்கும் தினமும் காலை, மாலை இருவேளைகளில் இண்டிகோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் கட்டணம் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. அதாவது, சேலத்தில் இருந்து சென்னைக்கு வழக்கமான நாட்களில் ஒரு பயணிக்கு ரூ.2,699 முதல் ரூ.3,300 வரை வசூலிக்கப்படும்.
ஆனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு பயணி சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் செல்வதற்காக ரூ.4,074 முதல் ரூ.8,763 வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். நாளை (திங்கட்கிழமை) ரூ.9,445 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதேபோல் இன்று சென்னையில் இருந்து சேலம் வருவதற்கு ரூ.15,144 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாளை ரூ.5,846 முதல் ரூ.14,304 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.