

பேளூர்: கோவில் அறங்காவலர் பதவி ஏற்பு விழா நிறுத்தி வைக்க மனு
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரில், இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீ தாந்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது அறங்காவலர் குழு உறுப்பினர் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அறங்காவலர் குழு பொறுப்புக்கான நிர்வாகிகள் தேர்வு செய்து அறிவிப்பு, ஒரு வாரத்துக்கு முன் வெளியானது. இதில் பேளூரில் 4 பேர், குறிச்சியில் ஒருவர் என, 5 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதாக சேலம் கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சின்னமநாயக்கன்பாளையம் ஊராட்சியில் ஒருவர் கூட கோவில் அறங்காவலர் குழுவில் நியமிக்கப்படவில்லை எனக்கூறி, அந்த ஊராட்சியில், தி.மு.க.,வை சேர்ந்த அங்கமுத்து, மணி, விவேகானந்தன், ராஜி, பாலு, கணபதி, வேலுமணி, குணசேகரன், செந்தில்குமார், சாமியப்பன் என, 10 கிளை செயலர்கள், மாவட்டச் செயலாளரின் மீது அதிருப்தியில் தி.மு.க.,விலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர். தாந்தோன்றீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக, பேளூரில், 3 பேர், சின்னமநாயக்கன்பாளையத்தில், 2 பேர், பாரம்பரியமாக நியமிக்கப்பட்டு வந்தனர். தற்போது சின்னமநாயக்கன்பாளையத்தில் ஒருவர் கூட அறங்காவலர் குழுவில் நியமிக்கப்படவில்லை. நாளை அறங்காவலர் குழு பதவி ஏற்பு விழா நிறுத்தி வைக்க 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அறங்காவலர் குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.