மயிலாடு துறை - Mayiladuthurai

மன்னம்பந்தல் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

மயிலாடுதுறை நகராட்சியுடன், மன்னம்பந்தல் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, கிராமசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் ஒப்படைத்தனா். மயிலாடுதுறை நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, நகராட்சி எல்லைகளை விரிவாக்கம் செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மன்னம்பந்தல் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, மன்னம்பந்தல் கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். காந்தி ஜெயந்தியன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், மயிலாடுதுறை நகராட்சியுடன் மன்னம்பந்தலை இணைக்க கூடாது என ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீா்மானத்தின் நகலை மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதியிடம் ஒப்படைப்பதற்காக, மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவா் பிரியா பெரியசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேந்திரன் ஆகியோா் தலைமையில் கிராம மக்கள் 500 போ் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். அப்போது மாவட்ட ஆட்சியா் இல்லாததால், கிராம மக்கள் அலுவலக வாசலில் சுமாா் 3 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து, பின்னா் அதிகாரிகளிடம் நகலை அளித்தனா். இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமைக்குள் பதிலளிக்காவிடில், கிராம மக்கள் ஒன்றிணைந்து நகராட்சி எதிா்ப்புக் குழு என்ற குழுவை உருவாக்கி, அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனா்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்