மண்டைக்காடு: கடற்கரையில் அழுகிய சடலம்.. போலீஸ் விசாரணை
மண்டைக்காடு அருகே கூட்டமங்கலம் பகுதியில் கடற்கரைப் பகுதியில் நேற்று (ஞாயிறு) விடுமுறை நாளில் ஒரு மனித உடல் மிகவும் அழுகிய நிலையில் கிடந்தது. இதை அடுத்து குளச்சல் மரைன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த மனித உடல் மிகவும் அழுகி ஆணா பெண்ணா என்று அடையாளம் காண முடியாத நிலையில் காணப்பட்டது. கால்களில் மூட்டுக்கு கீழ் சதைகள் எதுவும் இல்லாமல் எலும்புகளுடன் சங்கு சிப்பிகள் பிடித்திருந்தது. இதனால் கடலில் விழுந்து 2 மாதங்களுக்கு மேல் இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடற்கரை பகுதியில் சமீபத்தில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.