கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழையால் மாவட்டம் முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாய கட்டத்தை தாண்டி நிரம்பியுள்ள நிலையில், மழை அதிகரித்தால் எந்நேரமும் அணைகளில் இருந்த தண்ணீர் திறந்து விடப்படலாம். எனவே அணைகள், ஆற்றங்கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மழையால் குமரியில் 3வது நாளாக ரப்பர் பால்வெட்டும் தொழில், மீன்பிடி தொழில், மற்றும் பிற தொழில்கள் பாதிக்கப்பட்டன. கனமழையால் குமரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை திற்பரப்பு பகுதியில் மழை குறைந்திருந்ததால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆபத்தை உணராமல் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குழந்தைகளுடன் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளியலிட்டனர். அதே நேரம் மழை மதியத்திற்கு பின்னர் தொடர்ந்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பகல் 2. 30 மணியளவில் திற்பரப்பு அருவியில் மீண்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.