ஈரோடு: வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி
சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகளுக்கும் முதல்-அமைச்சர் சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ. 425 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வீடுகள் தோறும் குழாய் இணைப்புகள் வழங்குவதற்கு ஒவ்வொரு சிற்றூர்களில் ஏற்கனவே கான்கிரீட் போடப்பட்ட சாலைகளின் நடுவில் பள்ளம் தோண்டி குழாய்களை அமைத்துவிட்டு பல இடங்களில் தோண்டப்பட்ட குழியை சரியாக மூடாமல் சென்று விட்டனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதுபோல் சென்னிமலை அருகே பசுவபட்டி கிராமத்தில் குடிநீர் குழாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்ட இடங்களில் கான்கிரீட் தளம் அமைப்பதாக கூறி வேலைகள் நடைபெற்றுள்ளது. ஆனால் சரியாக சிமெண்ட் கலவை செய்யாமல் எம். சாண்ட் மூலம் பள்ளங்களை மூடுவதாக பசுவபட்டி பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது பெய்த கனமழையால் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்ட இடங்களில் கான்கிரீட் கலவை கரைந்து கற்களாக காட்சியளித்ததால் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து பசுவபட்டியை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு கலெக்டருக்கு வாட்ஸ்அப் மூலமாக தகவல் அனுப்பினார்கள். கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.