சென்னிமலை: ஆக்கிரமிப்பு... பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் மெயின் ரோட்டில் சிறுக்களஞ்சி ஊராட்சியில் கருப்பணசாமி கோயில் உள்ளது. இந்தக் கோயில் அருகில் உள்ள மெயின் ரோட்டில் இருந்து திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தளவாய்பாளையம்புதூருக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த சாலையின் ஓரத்தில் உள்ளவர்கள் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கம்பி வேலி அமைக்க முயற்சித்தபோது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்று பணிகளை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தியதால், தொடர்ந்து பணிகள் செய்யாமல் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று(செப்.12) காலையில் மணியளவில் மீண்டும் தார் சாலையின் ஓரத்தில் கம்பி வேலி அமைப்பதற்கான பணிகள் நடந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு சென்று தார் சாலை ஓரத்தில் ஆக்கிரமிப்பு செய்து எந்தப் பணிகளையும் செய்யக்கூடாது என தடுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.