அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு அக்ரஹாரம், சமுதாயக்கூடம் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் குறிப்பிட்ட இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான நபரை பிடித்து விசாரித்ததில் அவர், அக்ரஹாரம், பண்டாரத்து சந்து பகுதியைச் சேர்ந்த பாசில் (எ)பப்பாளி (27) என்பது தெரிய வந்தது. மேலும் அவரை போலீசார் சோதனையிட்டதில் அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா 100 கிராம் அளவில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ. 1,000 மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.