
ஈரோடு: நாய் குறுக்கே ஓடியதால் விபத்து..ஒருவர் பலி
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள காஞ்சிக்கோவில் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 46). சாலைப்பணியாளர். இவர் நேற்று முன்தினம் கவுந்தப்பாடி சந்தையில் இருந்து பள்ளிபாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். செட்டிபாளையம் அருகே சென்றபோது குறுக்கே திடீரென ஒரு நாய் ஓடி வந்தது. இதனால் திடீரென சுப்பிரமணி பிரேக் போட்டார். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சுப்பிரமணி படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சுப்பிரமணி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.