கோபி - Gobichettipalayam

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அணையாகும். சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் இங்கு வருவது வழக்கம். இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் வெயிலில் தாக்கம் அதிகளவில் இருக்கவே நாளுக்கு நாள் கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று கொடிவேரி அணைக்கு ஈரோடு, திருப்பூர்,கோவை, சேலம், மதுரை,தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்தும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு குடும்பத்துடன் வருகை தந்தனர். அருவி போல் கொட்டும் தண்ணீரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பல மணி நேரம் நின்று குளித்தும் அருகில் உள்ள பூங்காவில் குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். அதேபோன்று குடும்பம் குடும்பமாக அணையின் மேல் பகுதியில் பரிசல் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள், அணையின் கீழ் பகுதியில் விற்பனையான சுவையான மீன் வகைகளை சாப்பிட்டும் தங்கள் விடுமுறைகளை மகிழ்ச்சியாக களித்தனர். மிக குறைந்த செலவில் குடும்பத்துடன் விடுமுறை கழிக்க முடியும் என்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.