சென்னிமலை அருகே முகாசிபிடாரியூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்தில் 22 கிராம ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில் அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சியாக முகாசிபிடாரியூர் ஊராட்சி இருந்து வருகிறது. சுமார் 4,000 குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊராட்சியில் நெசவாளர்களுக்காக ஒரே இடத்தில் கட்டப்பட்ட 1010 வீடுகளை கொண்ட ஊராட்சியாகவும் முகாசிபிடாரியூர் ஊராட்சி திகழ்ந்து வருகிறது.
சமீபத்தில் முகாசிபிடாரியூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதாக தமிழக அரசு மூலம் அரசாணை வெளியிடப்பட்டது. மக்கள் தொகைக்கு ஏற்ப முகாசிபிடாரியூர் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றாமல் 2-ஆக பிரித்து தனித்தனி ஊராட்சிகளாக செயல்படுத்த வேண்டும் என ஏற்கனவே ஊராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.