ஈரோடு: நெல் நடவு பணியில் வெளி மாவட்ட தொழிலாளர்கள்
ஈரோடு கீழ்பவானி பாசனத்திற்கு உட்பட்ட நசியனூர், வில்லரசம்பட்டி, எல்லப்பாளையம், கொங்கம்பாளையம், பெரிய சேமூர், கங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் நாற்று நடவு பணிகள் தொடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நெல் நாற்று நடவு செய்வதற்கு போதிய அளவில் ஆட்கள் கிடைக்காததால் தர்மபுரி, அரூர், கிருஷ்ணகிரி, பொன்னாகரம், சேலம், ஆத்தூர், தலைவாசல், கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து விவசாய கூலி தொழிலாளர்கள் ஈரோடு சுற்று வட்டார பகுதிகளில் நெல் நாற்று நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: - கடந்த சில ஆண்டுகளாகவே திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு கிராமப் பகுதியில் இருந்து நேரடியாக பஸ்களும், வாகனங்களும் இயக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் அதிக அளவில் பனியன் மற்றும் கார்மெண்ட்ஸ் நிறுவனங்களில் வேலைக்கு செல்கின்றனர். இது தவிர 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பலர் வேலைக்கு சென்று விடுகின்றனர். இதனால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வெளியூரில இருந்து ஆட்களை வரவழைக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் ஈரோட்டில் கீழ்பவானி பாசனத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நெல் நாற்று நடவு பணிகளில் வெளி மாவட்டங்களை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.