கோவை: சலூன் கடைக்குள் உரிமையாளர் தற்கொலை
கோவை சுண்டபாளையம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(42). இவர் அதேபகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், அவர் கடன் தொல்லையால் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சிவக்குமார் நேற்று முன்தினம் சலூன் கடைக்குள் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆட்டோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.