கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கூலித்தொழிலாளி ஒருவரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தொண்டாமுத்தூர் நரசீபுரம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த சந்திரன் (47) என்ற கூலித்தொழிலாளி செப்டம்பர் 29ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் தனது வீட்டின் முன்புறம் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் வனத்திற்குள் விரட்டி வரும் சத்தம் கேட்டு எழுந்த சந்திரன், யானையைப் பார்த்து பயந்து ஓடியுள்ளார். அவரை விரட்டிச் சென்ற யானை, தனது தந்தத்தால் சந்திரனின் முதுகில் குத்தி, காலால் மிதித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த சந்திரன், முதுகு நெஞ்சுப் பகுதியில் இரத்தக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஆலாந்துறை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்த சந்திரனின் உடலை கைப்பற்றி, ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.